tamil stories

some feelings of the mind

you are

visitor

Monday, May 18, 2009

அறிமுகம்

சார், ஒரு சேவிங்க்ஸ் பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணனும்.

ஐந்தாறு செக்குகளை பாஸ் செய்து டோக்கன் புக்கில் போட்டுக்கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். ஒரு பெண். எங்கேயோ பார்த்த முகம் போல் இருந்தது. சரியாய் ஞாபகத்திற்கு வரவில்லை.

ஒப்பனிங் கார்டை எடுத்துக் கொண்டேன் .

அம்மா உங்க பேர் என்ன

ராணி

என்ன வேலை பார்க்குறீங்க

டான்சராய் இருக்கேங்க

எனக்கு பொறி தட்டினாற்போல் ஞாபகம் வந்துவிட்டது. இருபது வருடம் முன்னால் தஞ்சாவூர் கல்லூரியில் பீ .காம். முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தேன். நான் பி.யு.சி.யில் வாங்கியிருந்த மார்க்குக்கு காமெர்ஸ் தான் கிடைத்தது. ஹாஸ்டல் வாழ்க்கை. என்னுடன் ரூமில் நான்கு நண்பர்கள் இருந்தார்கள்.

ஒரு நாள் லன்ச் அவரில் ஹாஸ்டலில் சாப்பிட்டு ரூமில் அரட்டை. ஹாஸ்டல் எதிரே இருந்த டீக்கடையில் ஒரு பெரிய போஸ்டர் ஒட்டியிருந்தது.

"கலையுலக ரசிகப் பெருமக்களே

கலைக் காவலர்களே (நாங்கள்தான்)

கலை விழா காண தவறாதீர்கள்

இன்றைய ஸ்பெசல் திருச்சி ராணியின் அற்புத நடனம்.

வருக, வருக, ஆதரவு தருக

என்றது

டேய் இன்றைக்கு ரூரல் எக்கனாமிக்ஸ் தாண்டா மத்யானம் கிளாஸ். அருவைடா கட் பண்ணிட்டு கலை விழா போவோம் என்றான் ஓர் நண்பன்.

கிளம்பி விட்டோம்.

ஹாஸ்டல் மாணவர்கள்தான் கலையைக் காப்பாற்றுவார்கள் என்று கலைவிழாக் கோஸ்டிக்கு தெரியாதா என்ன?

அங்கே பலூனைச் சுடுவது வளையம் போடுவது போன்றவற்றைத் தாண்டி ஸ்டேஜ் முன்னாள் போய் உட்கார்ந்தபோது எல். ஆர். ஈஸ்வரி பாட்டுக்கு ஒரு பெண் பட்டத்து ராணி பார்க்கும் பார்வையை பார்த்துக் கொண்டிருந்தது. சவுக்கால் அடித்தபோது ஹ ஹ ஹ ஹ என்றது. எங்கள் பக்கத்தில் ஒரு அறுபது வயது கிழவனார் எங்களை விட உயரமாய் குதித்துக் கொண்டிருந்தார். ஒரு இருபது முப்பது பாட்டுக்கு ஆட்டம் போட்டுவிட்டு (ஆடி விட்டு என்று சொல்லக்கூடாது) ஸ்டேஜிலிருந்து இறங்கி கீழே வந்து ஒரு பத்து பன்னிரண்டு பாஸ் போர்ட் போட்டோக்களை ரசிகப் பெருமக்களுக்கு கொடுத்து விட்டு ஓடி மறைந்தது. என் கையிலும் ஒன்று வந்து விழுந்தது. என் உயிரினும் மேலான ரசிகனுக்கு என்று எழுதி ஆட்டோ கிராப் வேறு. அந்த போட்டோ கூட இந்தியன் எக்கனாமிக்ஸ் புத்தகத்தோடு கிராமத்தில் பரணில் இருக்கலாம் . அப்புறம் பி.காம். பாஸ் பண்ணி பேங்க் வேலை கிடைத்து இரண்டு மூன்று இடம் மாற்றலாகி இப்போது திருச்சிக்கு வந்து இரண்டு வருஷம் ஆச்சு.

சார், என்ன சார் யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க,

நிகழ்காலத்திற்கு வந்தேன்,

ஒண்ணுமில்லேம்மா அக்கௌன்ட் ஓபன் பண்ணனும்னா யாராவது ஏற்கனவே கணக்கு உள்ளவங்க இன்ற டக்சன் அதாவது உங்களை தெரியும்னு அறிமுகப் படுத்தி கையெழுத்து போடனும்மா. யாரையாவது தெரியும்னா கையெழுத்து வாங்கியாங்க. கணக்கு ஆரம்பிச்சுரலாம்.

என்ன சார் இப்போ கையிலே ஏதோ கொஞ்சம் பணம் இருக்கு. சேமிச்சு வைச்சா எதிர்காலத்துக்கு உதவும்னு பார்த்தா கையெழுத்தைக்கொண்டா அது இதுங்கிரீங்களே.அந்தப் பெண் யோசித்தவாறு நின்று கொண்டிருந்தாள்.

டேய் என் சாலரி அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கு பாருடா என்று கேட்டவாறு வந்த டிராப்ட் சீட் பாஸ்கரன் அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்த்தான்.

அடடே ராணியம்மாவா என்னம்மா இந்தப் பக்கம் என்றான்.

சார் நீங்க இங்கதான் வேலை பார்க்குறீங்களா. கணக்கு ஆரம்பிக்கனும்னு வந்தேன் சார். அறிமுகப்படுத்தி கையெழுத்து வேணும்னு கேட்குறாங்க. அதுதான் யோசனையாய் நிற்கிறேன். என்றாள். பிறகு மெல்லிய குரலில் நீங்க ஏன் ஒரு மாதமாய் வீட்டுப் பக்கமே வரலே என்றாள்,

அப்பா அம்மா வந்திருக்காங்க அதான் என்றான் பாஸ்கரன்.

பாஸ்கர் அந்தப் பெண்ணைத் தெரியும்னா நீயே கையெழுத்துப் போடேன் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த நான் கேட்டேன்.

பாஸ்கர் என் காதருகே குனிந்து மெல்ல ஏற்கனவே என் தலையை உருட்டிக் கொண்டிருக்கீங்க. இப்ப இந்த பெண்ணுக்கு இன்ற டக்சன் போட்டுக் கொடுத்தா ஆபீஸ் மொத்தமும் கேலி பண்ணியே என்னைக் கொன்னுறுவீங்க. நம்மால் முடியாது.

மெல்ல நழுவி தன் சீட்டில் போய் உட்கார்ந்து விட்டான். நான் அந்தப் பெண்ணை பார்த்தேன். அவள் கண்களில் நீர் திரையிட்டிருந்தது. இவன் சொன்னது அவள் காதுகளில் விழுந்திருக்க வேண்டும்.

நான் யோசித்தேன். ஓபனிங் கார்டை எடுத்து இத்தனை வருடமாய் தெரியும் என்ற இடத்தில் இருபது என்று எழுதி கையெழுத்தைப் போட்டு அந்தப் பெண்ணிடம் கொடுத்து அம்மா அந்த ஒன்று இரண்டு மூன்று என்று போட்டிருக்கும் இடத்திலெல்லாம் கையெழுத்தைப் போடுங்கள் என்றேன்.

அவள் அந்தக் கார்டை சிறிது நேரம் பார்த்தாள். யோசனையுடன் சார் என்னைத் தெரியுமா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்களா என்றாள்.

உங்கள் வீட்டுக்கு வந்ததில்லை. இருபது வருடம் முன் தஞ்சாவூர் கலை விழாவுக்கு வந்திருக்கிறேன் என்றேன்.

அவள் என்னை வியப்புடன் பார்த்தாள். அந்த முகத்தில் தெரிந்தது சந்தோசமா வருத்தமா என என்னால் கண்டுணர முடியவில்லை.

முத்துமாரி இங்கே வா இந்தக் கார்டை சேவிங்க்ஸ் ஆபிசரிடம் கொடுத்து கையெழுத்தை வாங்கு. ஐந்து நிமிடம் கழித்து

சேகர் இங்கே வாங்க. ஆபிசர் என்னை அழைத்தார்.

அருகில் போனதும் என்ன சேகர் தொழில் டான்சருன்னு போட்டிருக்கீங்க . இருபது வருடமாய் பழக்கம்னு எழுதிஇருக்கீங்க. ஏதாவது விசேசமா என்றார். அவர் முகத்தில் ஒரு குறும்பு தெரிந்தது.

என் நெஞ்சில் முள் குத்தியது.

சார் போன மாசம் வரை இவங்களோட பழகிக்கிட்டு இருந்த ஸஹ தோழர் இவங்களை அறிமுகப் படுத்த தயாராயில்லை. ஏன்னா அவர் காப்பாற்றி வச்சுக்கிட்டிருக்கிறதா நினைச்சுக்கிட்டிருக்கிற சுய கவுரவம் பாதிக்கும்னு அவருக்குத் தெரியும். ஆனா நான் இருபது வருஷம் முன்னாலே ஒரு சாதாரண ரசிகனாய் அதுவும் ஆயிரம் ரசிகர்களுக்கு நடுவிலே ஒருத்தனாய் இவங்களைச் சந்தித்தேன். என்னைப் பொறுத்த மட்டில் என் மனதில் இவங்க இன்னும் ஒரு டான்சராய்த்தான் இருக்காங்களே தவிர இன்றைக்கு நாம் பார்க்கிற இந்த நிலையிலே இல்லை. அதனாலே ஒரு டான்சராய்த்தான் ஒரு ரசிகன் என்கிற முறையிலே நான் அறிமுகம் செய்து வைக்கிறேன். இது தப்பா.

என் உணர்வுகள் என் முகத்தில் தெரிந்து விட்டன போலும்.

ஆபிசர் என்னை வியப்புடன் பார்த்தார், அவர் பார்வையில் இருந்த குறும்பு போய் என்னை அங்கிகரிப்பது தெரிந்தது.

No comments:

Post a Comment