tamil stories

some feelings of the mind

you are

visitor

Monday, May 18, 2009

அறிமுகம்

சார், ஒரு சேவிங்க்ஸ் பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணனும்.

ஐந்தாறு செக்குகளை பாஸ் செய்து டோக்கன் புக்கில் போட்டுக்கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். ஒரு பெண். எங்கேயோ பார்த்த முகம் போல் இருந்தது. சரியாய் ஞாபகத்திற்கு வரவில்லை.

ஒப்பனிங் கார்டை எடுத்துக் கொண்டேன் .

அம்மா உங்க பேர் என்ன

ராணி

என்ன வேலை பார்க்குறீங்க

டான்சராய் இருக்கேங்க

எனக்கு பொறி தட்டினாற்போல் ஞாபகம் வந்துவிட்டது. இருபது வருடம் முன்னால் தஞ்சாவூர் கல்லூரியில் பீ .காம். முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தேன். நான் பி.யு.சி.யில் வாங்கியிருந்த மார்க்குக்கு காமெர்ஸ் தான் கிடைத்தது. ஹாஸ்டல் வாழ்க்கை. என்னுடன் ரூமில் நான்கு நண்பர்கள் இருந்தார்கள்.

ஒரு நாள் லன்ச் அவரில் ஹாஸ்டலில் சாப்பிட்டு ரூமில் அரட்டை. ஹாஸ்டல் எதிரே இருந்த டீக்கடையில் ஒரு பெரிய போஸ்டர் ஒட்டியிருந்தது.

"கலையுலக ரசிகப் பெருமக்களே

கலைக் காவலர்களே (நாங்கள்தான்)

கலை விழா காண தவறாதீர்கள்

இன்றைய ஸ்பெசல் திருச்சி ராணியின் அற்புத நடனம்.

வருக, வருக, ஆதரவு தருக

என்றது

டேய் இன்றைக்கு ரூரல் எக்கனாமிக்ஸ் தாண்டா மத்யானம் கிளாஸ். அருவைடா கட் பண்ணிட்டு கலை விழா போவோம் என்றான் ஓர் நண்பன்.

கிளம்பி விட்டோம்.

ஹாஸ்டல் மாணவர்கள்தான் கலையைக் காப்பாற்றுவார்கள் என்று கலைவிழாக் கோஸ்டிக்கு தெரியாதா என்ன?

அங்கே பலூனைச் சுடுவது வளையம் போடுவது போன்றவற்றைத் தாண்டி ஸ்டேஜ் முன்னாள் போய் உட்கார்ந்தபோது எல். ஆர். ஈஸ்வரி பாட்டுக்கு ஒரு பெண் பட்டத்து ராணி பார்க்கும் பார்வையை பார்த்துக் கொண்டிருந்தது. சவுக்கால் அடித்தபோது ஹ ஹ ஹ ஹ என்றது. எங்கள் பக்கத்தில் ஒரு அறுபது வயது கிழவனார் எங்களை விட உயரமாய் குதித்துக் கொண்டிருந்தார். ஒரு இருபது முப்பது பாட்டுக்கு ஆட்டம் போட்டுவிட்டு (ஆடி விட்டு என்று சொல்லக்கூடாது) ஸ்டேஜிலிருந்து இறங்கி கீழே வந்து ஒரு பத்து பன்னிரண்டு பாஸ் போர்ட் போட்டோக்களை ரசிகப் பெருமக்களுக்கு கொடுத்து விட்டு ஓடி மறைந்தது. என் கையிலும் ஒன்று வந்து விழுந்தது. என் உயிரினும் மேலான ரசிகனுக்கு என்று எழுதி ஆட்டோ கிராப் வேறு. அந்த போட்டோ கூட இந்தியன் எக்கனாமிக்ஸ் புத்தகத்தோடு கிராமத்தில் பரணில் இருக்கலாம் . அப்புறம் பி.காம். பாஸ் பண்ணி பேங்க் வேலை கிடைத்து இரண்டு மூன்று இடம் மாற்றலாகி இப்போது திருச்சிக்கு வந்து இரண்டு வருஷம் ஆச்சு.

சார், என்ன சார் யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க,

நிகழ்காலத்திற்கு வந்தேன்,

ஒண்ணுமில்லேம்மா அக்கௌன்ட் ஓபன் பண்ணனும்னா யாராவது ஏற்கனவே கணக்கு உள்ளவங்க இன்ற டக்சன் அதாவது உங்களை தெரியும்னு அறிமுகப் படுத்தி கையெழுத்து போடனும்மா. யாரையாவது தெரியும்னா கையெழுத்து வாங்கியாங்க. கணக்கு ஆரம்பிச்சுரலாம்.

என்ன சார் இப்போ கையிலே ஏதோ கொஞ்சம் பணம் இருக்கு. சேமிச்சு வைச்சா எதிர்காலத்துக்கு உதவும்னு பார்த்தா கையெழுத்தைக்கொண்டா அது இதுங்கிரீங்களே.அந்தப் பெண் யோசித்தவாறு நின்று கொண்டிருந்தாள்.

டேய் என் சாலரி அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கு பாருடா என்று கேட்டவாறு வந்த டிராப்ட் சீட் பாஸ்கரன் அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்த்தான்.

அடடே ராணியம்மாவா என்னம்மா இந்தப் பக்கம் என்றான்.

சார் நீங்க இங்கதான் வேலை பார்க்குறீங்களா. கணக்கு ஆரம்பிக்கனும்னு வந்தேன் சார். அறிமுகப்படுத்தி கையெழுத்து வேணும்னு கேட்குறாங்க. அதுதான் யோசனையாய் நிற்கிறேன். என்றாள். பிறகு மெல்லிய குரலில் நீங்க ஏன் ஒரு மாதமாய் வீட்டுப் பக்கமே வரலே என்றாள்,

அப்பா அம்மா வந்திருக்காங்க அதான் என்றான் பாஸ்கரன்.

பாஸ்கர் அந்தப் பெண்ணைத் தெரியும்னா நீயே கையெழுத்துப் போடேன் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த நான் கேட்டேன்.

பாஸ்கர் என் காதருகே குனிந்து மெல்ல ஏற்கனவே என் தலையை உருட்டிக் கொண்டிருக்கீங்க. இப்ப இந்த பெண்ணுக்கு இன்ற டக்சன் போட்டுக் கொடுத்தா ஆபீஸ் மொத்தமும் கேலி பண்ணியே என்னைக் கொன்னுறுவீங்க. நம்மால் முடியாது.

மெல்ல நழுவி தன் சீட்டில் போய் உட்கார்ந்து விட்டான். நான் அந்தப் பெண்ணை பார்த்தேன். அவள் கண்களில் நீர் திரையிட்டிருந்தது. இவன் சொன்னது அவள் காதுகளில் விழுந்திருக்க வேண்டும்.

நான் யோசித்தேன். ஓபனிங் கார்டை எடுத்து இத்தனை வருடமாய் தெரியும் என்ற இடத்தில் இருபது என்று எழுதி கையெழுத்தைப் போட்டு அந்தப் பெண்ணிடம் கொடுத்து அம்மா அந்த ஒன்று இரண்டு மூன்று என்று போட்டிருக்கும் இடத்திலெல்லாம் கையெழுத்தைப் போடுங்கள் என்றேன்.

அவள் அந்தக் கார்டை சிறிது நேரம் பார்த்தாள். யோசனையுடன் சார் என்னைத் தெரியுமா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்களா என்றாள்.

உங்கள் வீட்டுக்கு வந்ததில்லை. இருபது வருடம் முன் தஞ்சாவூர் கலை விழாவுக்கு வந்திருக்கிறேன் என்றேன்.

அவள் என்னை வியப்புடன் பார்த்தாள். அந்த முகத்தில் தெரிந்தது சந்தோசமா வருத்தமா என என்னால் கண்டுணர முடியவில்லை.

முத்துமாரி இங்கே வா இந்தக் கார்டை சேவிங்க்ஸ் ஆபிசரிடம் கொடுத்து கையெழுத்தை வாங்கு. ஐந்து நிமிடம் கழித்து

சேகர் இங்கே வாங்க. ஆபிசர் என்னை அழைத்தார்.

அருகில் போனதும் என்ன சேகர் தொழில் டான்சருன்னு போட்டிருக்கீங்க . இருபது வருடமாய் பழக்கம்னு எழுதிஇருக்கீங்க. ஏதாவது விசேசமா என்றார். அவர் முகத்தில் ஒரு குறும்பு தெரிந்தது.

என் நெஞ்சில் முள் குத்தியது.

சார் போன மாசம் வரை இவங்களோட பழகிக்கிட்டு இருந்த ஸஹ தோழர் இவங்களை அறிமுகப் படுத்த தயாராயில்லை. ஏன்னா அவர் காப்பாற்றி வச்சுக்கிட்டிருக்கிறதா நினைச்சுக்கிட்டிருக்கிற சுய கவுரவம் பாதிக்கும்னு அவருக்குத் தெரியும். ஆனா நான் இருபது வருஷம் முன்னாலே ஒரு சாதாரண ரசிகனாய் அதுவும் ஆயிரம் ரசிகர்களுக்கு நடுவிலே ஒருத்தனாய் இவங்களைச் சந்தித்தேன். என்னைப் பொறுத்த மட்டில் என் மனதில் இவங்க இன்னும் ஒரு டான்சராய்த்தான் இருக்காங்களே தவிர இன்றைக்கு நாம் பார்க்கிற இந்த நிலையிலே இல்லை. அதனாலே ஒரு டான்சராய்த்தான் ஒரு ரசிகன் என்கிற முறையிலே நான் அறிமுகம் செய்து வைக்கிறேன். இது தப்பா.

என் உணர்வுகள் என் முகத்தில் தெரிந்து விட்டன போலும்.

ஆபிசர் என்னை வியப்புடன் பார்த்தார், அவர் பார்வையில் இருந்த குறும்பு போய் என்னை அங்கிகரிப்பது தெரிந்தது.

சாபங்களும் வரங்கள் ஆகலாம்.

சாபங்களும் வரங்கள் ஆகலாம்.


ஏன்டா அதுக்குள்ளே எந்திரிச்சுட்டே ? போறுமா! அம்மா கேட்டாள்

போரும்மா, வயறு சரியில்லே!

ஏன்டா வயறு சரியில்லையா இல்லை மனசு சரியில்லையா? எங்கிட்ட ஏன் பொய் சொல்றே. என்ன நடந்துதுன்னு நீ இப்போ வயத்தைக் காயப்போடுராய் உன் அப்பா என்ன அப்படி அதிசயமாய் திட்டிட்டார், தினம்தான் திட்டறார். நீ அந்த பாலாய்போன டிகிரியை வாங்கி வந்த நாள் அன்னைக்கு வாழ்த்தினதொடு சரி. மருநால்லேர்ந்து திட்டிண்டுதான் இருக்கார். வயத்துக்கு வஞ்சனை பண்ணாமல் ஒழுங்காய் இன்னும் இரண்டு தோசை தின்னு,

அம்மா உன்னால் மட்டும் எப்படி இப்படி இருக்க முடிகிறது. அதனாலதான் கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் என்கிறார்களோ. அவன் கலங்கிய கண்களோடு அவளைப் பார்த்தான். ஏற்கனவே புகையின் நடுவில் மங்கலாய் தெரிந்த அம்மா இன்னும் மங்கலாய் தெரிந்தாள்.

முரளி இங்க பாரு, இப்ப எதுக்கு மனசப் போட்டு வேதனைப் படுத்திக்கிராய். உன்னோடு படிச்ச குழந்தைகள்ள முக்கால் வாசிப்பேர் உன்னை மாதிரித்தான் வேலை கிடைக்காம போஸ்ட் ஆபீசும் லைப்ரர்யுமாஅலைந்து கொண்டு இருக்கிறார்கள். நீயும் பேங்க் பரீட்சை இன்சூரன்ஸ் பரீட்சை என எழுதிக்கொண்டு தான் இருக்கிறாய். பெயிலாறது கூட கிடையாது. எல்லாம் பாசாயிண்டுதான் இருக்கே. அப்புறம் நடக்கிற இண்டர்வியுவுலதான் உயரமான மலை எது? பள்ளமான கடல் எது? ன்னு இரண்டு அபத்தக் கேள்விகளா கேட்டு வீட்டுக்கு அனுப்பிர்ரன். அப்புறம் அடுத்த வருஷம் பரிச்சைக்கு கூப்பிடறபோது தான் தெரியறது. போன வருஷம் கோவிந்தான்னு. அதுக்கு நீ என்ன பண்ணுவே. தப்பு உன்மேல இருந்தா இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டியதுதான். செய்யாத தப்புக்கு ஏன் அழறே? எல்லாம் நேரம் வரப்போ தானே வரும்.

அம்மா அவன் தலையைத் தொட்டாள். அவன் முழுவதும் உடைந்தான்.

அம்மா நான் ஒன்னும் வேலை கிடைக்கலைன்னு அழலை. அப்பா எப்போ பார்த்தாலும் நான் சாப்பிடறதை பத்தி மட்டும்தான் திட்டறார். தண்டசோறு, எருமைமாடு, மூணு வேலையும் முழுங்கிட்டு ஓட்டச் சிவிங்கி மாதிரி வழங்திருக்கானே தவிர கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா பாரு. நாள் பூராவும் ஊரைச் சுத்திட்டு கொட்டிக்கிரதுக்கு மட்டும் வீட்டுக்கு வந்துர்ரான். என்று எப்ப பாத்தாலும் சாப்பாட்டைப் பற்றி தான்மா திட்டுறார். அதான்மா என்னால பொறுக்க முடியலே. எனக்கு மட்டும் வேலைக்கு போகனும்னு ஆசை இல்லையா என்ன ? இல்லை காலம்பூராவும் அப்பா சம்பாத்யத்திலேய ஓடிடும் னு நினைக்கிறேனா இல்லையே அப்பாவுக்கு இன்னும் நாலைந்து வருசம்தான் சர்வீஸ்னு தெரியும்மா, ஆனா நான் என்ன பண்ணுவேன் ? உயர்த்தப்பட்டவர்கள் , அது, இது ன்னு இந்த கவர்ன்மெண்டே ஆயிரத்தெட்டு பிரிவுகளை உண்டாக்கி நாளைக்கு ஒரு சட்டம்னு உண்டாக்கிகிட்டு இருக்கிறப்போ நூற்றுக்கு நூறு மார்க் வாங்கினாக்கூட நாங்கல்லாம் தெருவிலே நிற்க வேண்டியதுதான் பிட்சை எடுக்க போக வேண்டியதுதான் .. ஒருவேளை இந்த கவர்ந்மேண்டோட ஆசை அதுதானோ என்னமோ. எனக்கு அதெல்லாம் கூட கவலை இல்லேம்மா. அப்பா ஒரு பள்ளிக்கூட வாத்தியாரா இருந்துகொண்டு இப்படி பிரச்சினைகளை நிதர்சனமா பாக்காம ஏதோ நான்தான் வேணும்னே வேலைக்குப் போகாம திண்ணையிலே உட்கார்த்திருக்கிரமாரி திட்டறதுதான் என்னாலே தாங்க முடியலே.


இந்தக் குழந்தைக்குதான் இந்தச் சின்ன வயசிலேயே எவ்வளவு ஏமாற்றம் தவிப்பு . எங்கேயாவது காலூன்றி வேரூன்றி நிர்கமாட்டோமான்னு இது தவிக்கிற தவிப்பும் , அரசாங்கச் சட்டமும் சமுதாய மாற்றமும் பெருகி வரும் வெள்ளமாய் வேரோடு பறித்துப் போட்டு இந்த இளங்கன்றுகளை மெது மெதுவாய் சாகடித்துக்கொண்டு இருப்பதும் ஒன்றும் நல்லதாய் தெரியலையே. காலம் காலமாய்த்தான் ஜனத்தொகை பெருகிண்டு இருக்கு. திடீர்னா பெருகிடுத்து. இந்த அரசாங்கமெல்லாம் மொத்த மொத்தமாய் கணக்கு போட்டுப் பார்கிறதுதான் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணமோ என்று தோன்றுகிறது. அந்தக் காலத்திலே யார் இப்படி கணக்கு பார்த்துண்டு உட்கார்ந்திருந்தா. எனக்கு கல்யாணம் ஆறப்போ இவர் எட்டாம் வகுப்பு படிச்சுண்டிருந்தார். என்ன வேலை கிடைக்கும்னு நம்பி எங்கப்பா இவருக்கு கட்டிக் கொடுத்தார். அப்போல்லாம் யார் இப்படியெல்லாம் கவலைப்பட்டா. ஏதோ இவரே வயலை வித்து வந்த காசிலே ஒரு ட்ரைனிங் முடிச்சுட்டு வாத்யாராய் ஆனார். இந்தோ முப்பது வருஷம் ஓடிப் போச்சு. இவனோட வயசுலே இவங்கப்பாவுக்கு இரண்டு குழந்தை ஆயிடுத்து. இவனும் ராஜாவும். இன்னைக்கு என்னடான்னா வாழ்க்கையின் முதல் படியிலேயே இவன் தடுக்கி விளுந்திண்டு இருக்கான். இவனுக்கு என்னைக்கு வேலை கிடைச்சு எப்போ கல்யாணம் ஆஹி குடும்பம் குட்டின்னு ஆகப்போறானோ தெரியலையே.

என்னம்மா என்னைச் சொல்லிட்டு நீ விட்டத்தை பார்த்துண்டு உட்கார்ந்திட்டே. நான் போய் அப்பா திட்டின அந்த அட்வர்டைச்மைண்டை பார்த்துட்டு அப்படியே போஸ்ட் ஆபீசும் போயிட்டு வந்திர்றேன்.

சாமிநாதா இந்தக் குழந்தைக்கு ஒரு வழியைக் காண்பிடாப்பா. அம்மா சொல்லிக் கொண்டிருந்தபோது அந்த ஆறரை அடிக் குழந்தை ரோட்டில் போய்க் கொண்டிருந்தது.


*********
ஏண்டி முரளி எங்கே காணோம் சாப்பிட்டுக்கொண்டே கணேசன் கேட்டார்.

காலையிலேயே அரை குறையாய் சாப்பிட்டுட்டு லைப்ரரி போறேன்னு போனவன்தான் இன்னும் காணோம்.

எங்கேயாவது ஊரைச் சுற்றிக்கொண்டு இருப்பான் தடிக்கழுதை.

ஏன்னா நான் ஒன்னு சொல்வேன் கேட்பேளா.

என்ன?

இனிமே அவனை தடிக்கழுதை எருமை மாடு ஓட்டச்சிவிங்கி ன்னு ஊர்ல இருக்கிற பிராணி பேரெல்லாம் சொல்லி திட்டாதீங்கோ. அவன் ரொம்ப மனம் வேதணைப் பட்டுப் போயிருக்கான். காலையிலே கூட சரியாச் சாப்பிடாம அழுதுகொண்டே இருந்தான். நான்தான் சமாதானம் பண்ணி அனுப்பி வைச்சேன். அந்த பேப்பர் என்ன ஓடியா போயிடறது. இரண்டு நாள் லேட்டாய் அப்ளை பண்ணினால்தான் என்ன?

ஓஹோ , கழுதைக்கு கோபம் வந்திருச்சோ.

இப்பத்தானே சொன்னேன், அதுக்குள்ளே திட்டறேலே.

சரி,சரி, நீ ரொம்ப செல்லம் கொடுத்து அவனைக் குட்டிச்சுவராய் ஆக்கிட்டே அவ்வளவுதான் சொல்வேன் . கணேசன் எழுந்தார்.

நீங்க ஒன்னும் உங்க கோபத்தை சாப்பாட்டின் மேலே காட்டவேண்டாம். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இது ஒன்றிலே தான் ஒற்றுமை.

*********

முரளி அன்று மாலையும் வரவில்லை. சின்னவன் ராஜாவும் தங்கைகள் உமாவும் ராணியும் ஊரெல்லாம் தேடினர். மறுநாள் விடிவதற்குள் ஊருக்கே தெரிந்துவிட்டது.

ஏம்பா நம்ப வாத்தியார் பையன் ஊரை விட்டு ஓடிபோயிட்டனாமே.

வாத்தியார் ஸ்கூல் பசங்களேயே கழுதை எருமைன்னுதான் திட்டுவார். வீட்டுலேயும் அப்படித்தான். பயல் ரோசம் வந்து ஓடிப்போயிட்டான் போலேருக்கு. அவர்தான் என்ன பண்ணுவார் பாவம். நாளும் வளர்ந்த குழந்தைகள். இருக்கிற கோபம் வாயிலே வந்துர்றது. அதுக்காக படிச்ச பையன் இப்படி பண்ணலாமோ.

மூன்று நாள் பார்த்துவிட்டு போலீஸ் ஸ்டேசன்லே புகார் பண்ணினார் கணேசன்.

கணக்கு வகுப்பு. வாத்தியார் மனம் வெம்பிய மாம்பிஞ்சாய் வேதனையில் இருந்தது.

ஆருனாளாச்சே இன்னும் ஒரு சேதியும் காணலையே கடவுளே.

சார், சார், ஆறுநாள் இல்லே சார் பதினாறு நாளுக்கு வட்டி போடணும் ,புரியாத பையன் ஒருவன் புலம்பினான் எதிரில்,

சார், உங்களுக்கு ஒரு லெட்டர், பியூன் பெருமாள் கொடுத்துவிட்டுச்சென்றான் .

முரளிதான் என்பதை முகவரியே சொல்லிற்று.

அன்புள்ள அப்பாவிற்கும் அம்மாவிற்கும்

முரளி வணக்கம் பல.

உங்களையெல்லாம் ஆறேழு நாட்களுக்குமேல் தவிக்க வைக்க விரும்பாமையால் இந்த ஆர்மி காம்பிற்கு வந்த அன்றே இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன்.


இந்தக்கடிதத்தை உடனே எழுதி விடவேண்டும் என்று என் மனம் தவித்தாலும் வெகுதூரம் விலகிய பிறகு இந்தக்கடிதத்தை நான் எழுதினால்தான் நானாக தேடிக்கொண்ட இந்த ஆர்மி வாழ்க்கைக்கு உங்கள் பாசம் தடை ஆகாமல் இருக்கும் என நானே ஒரு நாலைந்து நாள் விலங்கிட்டுக்கொண்டேன்.

திருச்சி ரெக்ரூட் மென்டில் செலக்ட் ஆன உடனேயே இந்தக் கடிதத்தை நான் எழுதி இருந்தால் சென்னைக்கு துரத்தி வந்து என்னைத் தடுத்து விடுவீர்கள் என்பதால் ஆறு நாட்கள் உங்கள் வேதனையை அதிகப் படுத்தியதற்கு என்னை மன்னித்து விடுங்கள்.

எந்த அதிகப்படியான உயரமும் வளர்ச்சியும் உங்களிடமெல்லாம் எருமைமாடு என்றும் ஓட்டச்சிவிங்கி என்றும் அர்ச்சிக்கப்பட்டதோ, அதுவே ஒரு குவாளிபிகேசனாக அந்த ரெக்ரூட் மென்ட் அதிகாரிகலாலே ஒரு புன்னகையால் அங்கிகரிக்கப்பட்டபோது நான் சற்று மேலும் வளர்ந்தேன்.

சிபார்சுகளுக்கும் ரிசர்வேசன்களுக்கும் நடுவே என் பட்டங்கள் பயன்படாமல் இருந்த காலம் போய் திட்டப்பட்ட காரணங்களே சிபார்சுகலாய் நின்றபோது நான் திகைத்துத்தான் போனேன்,

இதோ இந்த பனி மலைகளும் யூகலிப்டஸ் மரங்களும் என் முன்னே பறந்து விரிந்து கிடக்கும் இயற்கையும் என் உயரத்தை அங்கிகரித்து சிரிப்பதாய் நான் உணர்கிறேன்.

அம்மாவிற்கு என் நமஸ்காரங்கள்

ராஜா உமா ராணிக்கு என் ஆசிகள்.

அன்புடன் முரளி


*******
யாரையுமே யாருமே சரியாய் புரிஞ்சுக்கிறதே இல்லே. யார் யாரைத் திட்டினா? அங்க பள்ளிக்கூடத்திலே அறுபது பயல்களோட கத்திப்புட்டு வீட்டுக்கு வந்தா இவன் அப்ளிகேசன் போடலை, அட்ரஸ் சரியில்லை, ஆபிஸ் சரியில்லை ன்னு எதையாவது உளறிண்டு இருந்தால் கோபம் வருமா வராதா. வயத்தெரிச்சலில் நாலு வார்த்தை வந்துர்றது.

கோழி முதிச்சு குஞ்சு முகம் வாடிருமா என்ன. எங்கேயாவது எப்படியாவது நன்னாயிருந்தால் சரி. இவதான் கொஞ்சம் அழுவா. ஏதோ நாளைக்கே துப்பாக்கியை தூக்கிக்கொண்டு சண்டைக்குப் போயிருவான்கிற மாதிரி. கொஞ்சம் சமாதானம் பண்ணனும்.

பர்மிசனில் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்த வாத்தியார் சைக்கிளை வேகமாய் மிதித்தார்.

***********

ஓரிடம் இரு

ஓரிடம் இரு

டேய் கருப்பையா மாட்டு வண்டியை எடுத்துக்கிட்டு மேட்டுப்பட்டி போய் அந்தக் கரகாட்டம் ஆடுற சொர்னாவைக் கூட்டிக்கிட்டு வாடா. என்றார் வேலுசாமி மீசையைத் தடவி விட்டுக்கொண்டே.

எதிரே உட்கார்ந்திருந்த எனக்கு தூக்கிப் போட்டது. ஐம்பதைத் தாண்டியும் இந்த ஆசாமி ஏன் இப்படி ஆட்டம் போடுகிறார். என்று நினைத்துக்கொண்டேன். தர்மகர்த்தா என்றால் தர்மத்தை காப்பவர் என்று அர்த்தம் அல்லவா. லேசாய் சிரிப்பு வந்தது.

தம்பி என்ன ஒரு மாதிரி முழிக்கிறீங்க. நானும் வந்ததிலிருந்து பார்த்துகிட்டிருக்கேன். சிகரெட் தான் குடிக்க மாட்டேன் னுட்டீங்க. டிரிங்க்சும் வாங்கி வந்ததைஎல்லாம் நானே குடிச்சாச்சு. இப்ப சொர்னாவைக் கூட்டி வான்னதும் பேய் முழி முழிக்க ஆரம்பிச்சுட்டீங்க. இந்த இருபதும் சொச்சத்திலே ஏன் தம்பி இப்படி சாமியார் மாதிரி இருக்கீங்க. அவர் கட கடவென சிரித்தார்.

நான் வானத்து நிலவையே பார்த்துக் கொண்டிருந்தேன், அருகம்புல் ஓரத்தில் ஒட்டிக் கொண்ட பனித்துளியை க்ளோஸ் அப்பில் காட்டுவது மாதிரி அந்த நிலா தென்னை ஓலையின் ஒரு கீற்றில் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது. மணி எட்டு இருக்குமோ. நேற்றோ இன்றோ பௌர்ணமியாய் இருக்க வேண்டும். வயல் காற்று உர வாசனையோடு ஜில்லென்று முகத்தில் அடித்தது.

நாங்கள் உட்கார்ந்திருந்த இடம் களத்து மேடு என்கிற கதிர் அடிக்கிற இடம். சுற்றிலும் வயல். கீழண்டைப்புரத்தில் ஒரு பெரிய கேணி. கேணியை ஒட்டி இரண்டு ரூம் கட்டி அதில் ஒன்றில் மோட்டார் இருந்தது. வயல் தர்மகர்த்தாவுடையதுதான். ஏன் ஊரே அவருடையதுதான்.

நான் தொல்பொருள் ஆராய்ச்சியாளன். இங்கே கிராமத்துக் கோயிலில் பழைய கல் வெட்டுக்கள் இருப்பதாய் கேள்விப் பட்டு சென்னையிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கு தர்மகர்த்தா கொடுக்கும் அன்பான உபசரிப்புத்தான் சிகரெட் இத்யாதிகள்.

ஒரு வேலை நான் சாமியார் மாதிரிதான் இருக்கிறேனோ. கல்லூரி நாட்களிலேயே எனக்கு புத்தகப்புழு என்றுதான் பேர். இப்போதும்கூட கையில் விவேகானந்தரோ ராமகிருஷ்ணரோ தான் இருக்கும். அப்படி ஏதும் இல்லா விட்டாலும் கூட நிலவுதான் என் நண்பன். நல்லவன். மௌனமானவன். எல்லாக் காரியங்களுக்கும் ஒரு காரணம் இருக்கும் என்று சொல்கிறதே கீதை , இதற்கும் ஏதேனும் காரணம் இருக்கும்.

தூரத்தில் வில்வண்டி வருவது நிலவொளியில் லேசாய்த் தெரிந்தது.

தம்பி, இருபது முப்பது வருசமாய் இது பழகிப்போச்சு தம்பி. சுற்று வட்டார கிராமங்களிலிருந்து எனக்கு எப்போதும் கூட்டிக்கிட்டு வருகிறவன் கருப்பையாதான். சின்ன வயசிலே அப்பா இருந்த காலத்திலே சினிமாவுக்குப் போறதாச் சொல்லிட்டு இப்படி எங்கேயாச்சும் போய் விடுவேன். அப்பா காலமானதற்கு பிறகு நானே பெரிய தலைக்கட்டாய் ஆனதற்கு அப்புறம் இருந்த பயமும் போச்சு. எல்லாம் இந்த வயல் வீட்டிலேதான். அவர் மீண்டும் சிரித்தார்.

அந்த சிரிப்பு எனக்கு பிடிக்க வில்லை. பிரம்மச்சரியத்துக்கும் சாமியாருக்கும் வித்தியாசம் தெரியாத இந்த ஆசாமியை என்ன செய்வது. இவர் என் இந்த வயசில் இப்படி இருக்கிறார். தான் செய்வது தவறு என்று இவருக்கு தோன்றாதோ. எதிரில் ஒரு இருபது வயது பையன் இவை எதுவும் தேவை இல்லை என்று உட்கார்ந்திருக்கிறானே நம்மால் முடியவில்லையே என்று அவமானமாய் இருக்காதோ.

வில்வண்டி களத்தில் வந்து நின்றது. பின்பக்கமாய் ஒரு பெண் இறங்கினாள். பக்கத்தில் வந்ததும் வேலுச்சாமியை பார்த்து ஒரு பழகிய சிரிப்பையும் என்னைப் பார்த்து ஒரு அறிமுகச்சிரிப்பையும் உதிர்த்தாள். நான் என் கால்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தம்பி ரொம்ப வெட்கப் படுது என்றாள்.

வேலுச்சாமி வயல் பக்கமாய் எழுந்து போனார்.

வண்டியிலே வரும்போதே கருப்பையா சொல்லிச்சு. சார் ரொம்ப சின்னப் பையனாய் இருக்கார்னு. ஆசையாய் வந்தால் நீ இப்படி இருக்கியே. என்றாள்.

எனக்கு ஏனோ எச்சில் இலை ஞாபகம் வந்தது. உடம்பெல்லாம் கம்பளி பூச்சி ஓடியது.

நிலவு இப்போது தென்னை ஓலையை விட்டு விட்டு அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது.

எனக்கு வேண்டாம். என்று சொல்லி விட்டு சேரில் சாய்ந்தவாறு கண்களை மூடிக் கொண்டேன்.

கண் திறந்து பார்த்தபோது நிலவு உச்சியில் இருந்தது. அவள் இல்லை. வேலுச்சாமியும் இல்லை. கருப்பையா வில்வண்டி பக்கத்திலேயே வைக்கோல் பரப்பித் தூங்கிகொண்டிருந்தான்.

உச்சி நிலவு போல் மனமும் தெளிவாய் இருந்தது. தூங்கிப் போனேன்,

சுளீர் என்று வெயில் அடித்து எழுந்தபோது வேலுச்சாமி எதிரில் உட்கார்ந்திருந்தார். குளித்து சுத்தமாய் வீபூதீ அடித்திருந்தார். நேற்றுப் பார்த்த வேலுச்சாமியா இவர். வில்வண்டியையும் கருப்பையாவையும் காணோம்.

தம்பி, மோட்டார் ஓடுது. போய் குளிச்சுட்டு வாங்க. வீட்டில் போய் சாப்பிட்டுட்டு அப்படியே கோவிலுக்கும் போயிட்டு வரலாம்.

வீடு பெரிய வீடாய் கல் வீடாய் இருந்தது. எட்டு சுற்றுக்கட்டு வைத்து கட்டிய வீடு. இட்லியைச் சாப்பிடும்போது முற்றத்து வெயில் இரண்டு முறை இலையைத் தொட்டபோது நகர்த்திக் கொண்டேன். சூரியனுக்கும் பசிக்குமோ. வெயிலுக்காக நான் இலையை இழுப்பதை பார்த்து அந்த அம்மாள் லக்ச்மிகரமாய் சிரித்தார்கள். முகம் தெளிவாய் இருந்தது. தன் கணவரைப்பற்றி ஒன்றுமே தெரியாதோ இவர்களுக்கு. அல்லது எல்லாம் தெரிந்தும் தலைக்கு மேலே போய் விட்டது என்ற நிலையில் உள்ள அமைதியோ.

கல்யாணி வெயில் வராம இலையை வடக்குத் திண்ணையில் போட்டிருக்கலாமில்லே என்றார், வீடு அமைதியாய் இருப்பதைப் பார்த்து பிள்ளைகள் எங்கே என்றேன். அம்மா வேகமாய் உள்ளே போனதில் கோபம் தெரிந்தது.

என் கண்களை பார்க்க முடியாமல் வேலுச்சாமி தலை குனிந்து கொண்டு "அதுதான் ஆத்தா இன்னும் தல்லே" என்றார். நான் கேட்டிருக்கக் கூடாதோ. தராத காரணம் இவருக்குத் தெரியாதா என்ன?

கோவிலுக்கு நடந்தோம். பருத்திக்காட்டுக்கு நடுவே சின்னக் கோவிலாய் இருந்தது. சுற்று மண்டபத்தில் ஆல் அரசு வேம்பு என ஒரே காடாய் இருந்தது. கதவு இல்லை. உள்ளே காளி ஒன்று கையில் உள்ள சூலத்தால் கீழே விழுந்து கிடக்கும் ராஜாவைக் கொல்வதுபோல் உக்கிரமாய் நின்று கொண்டிருந்தது. சுற்றுச் சுவர் பூராய் ஒரே கல் வெட்டாய் இருந்தது. பல்லவர் கால கோயிலாய் இருக்கலாம் .

ஆத்தா பேரே கொல்லும் காளிதாங்க என்றார்.

இவையெல்லாம் வாழ்ந்த தெய்வங்களாய் இருக்கும். அரசனோ பிறரோ மிகவும் முறை கேடாய் ஒழுக்கம் கெட்டுப் போகும்போது ஒரு பெண் கோபம் கொண்டு கொலையும் செய்திருக்கலாம். அந்த முயற்சியில் அவள் இறந்தும் போயிருக்கலாம். ஊரார் அவளை வணங்கும் போது அவள் நாளடைவில் தெய்வமாகிறாள். மணப்பாறையில் இதே போல் ஒரு காளி இருக்கிறது. அது தன் மடியில் ஒரு அரசனைப் போட்டு வயற்றைக் கிழித்து குடலைத் தின்பதுபோல் உட்கார்ந்திருக்கிறது. அதன் அருகே ஒரு பெண் ஒரு கைக் குழந்தையோடு நிற்கிறாள். கற்ச்சிர்ப்பம் இல்லை சுதை வேலை. நான் அந்தக் கோயிலுக்கு போனபோது அப்போதுதான் கும்பாபிசேகம் பண்ணி பெயிண்ட் எல்லாம் அடித்து வைத்திருந்ததால் குடல் வாயெல்லாம் ஒரே சிகப்பாய் தத்ரூபமாய் இருந்தும் தூக்கி வாரிப் போட்டது. அங்கே உள்ளவர்களுக்கு அதன் வரலாறோ அந்தக் குழந்தையும் தாயும் என்ன என்றோ சொல்லத் தெரியவில்லை. அதுவும் ஏதேனும் வாழ்ந்த தெய்வம்தான் என்றேன்.

தம்பி நான் சின்னப் பிள்ளையிலேர்ந்து இந்தக் கோயிலுக்கு வந்துகிட்டு இருக்கேன், இப்ப நீங்க வந்து வயத்தைக் கலக்குறீங்களே. என்றார்.

நீங்கள் பயப்படவேண்டியவர் தான் என நினைத்துக் கொண்டேன்.

அந்தக் கோயிலில் பத்து நாள் வேலை இருந்தது. போட்டோக்கள் எடுத்து, கல் வேட்டுக்களை படிவம் எடுத்து குறிப்பெழுதி பத்து நாள் போனது. நடுவில் ஒருநாள் முன் மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

லேசாய் மழை தூறிக் கொண்டிருந்தது.

ஐயா வயல்ல பாத்தி கட்டி விதை நெல்லு போடுறோம். ஆனா சமயத்துலே மழை பெஞ்சு விதையைப் பூரா பக்கத்து வயல் வரப்பு காடு கரைன்னு அடிச்சுட்டுப் போயிரும் . ஒரு பத்து நாள் கழிச்சு பாத்தா அம்புட்டு நெல்லும் அங்கங்கே முளைச்சிருக்கும். ஆனா அதையெல்லாம் நம்ம நெல்லுன்னு உரிமை கொண்டாட முடியாது. நம்ப வயல்ல விளைஞ்சல்தான் நம்ம நெல்லுன்கிற உரிமை நமக்கு வரும். இதை நீங்க புரிஞ்சுக்கிட்டிங்கன்னா சரி. என்றேன்.

வேலுச்சாமியின் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தது. தம்பி நீங்க பூடகமா என்ன சொல்றீங்கன்னு எனக்குப்புரியுது. நிச்சயமா ஒரு வழி ஆத்தா காண்பிப்பாள் . என்றார் சன்னதியைப் பார்த்துக்கொண்டே.

அப்புறம் மெட்ராஸ் வந்து ரிப்போர்ட் கொடுத்து விட்டு ஆபீஸ், பல்லவன், வீடு என அலைந்து கொண்டிருந்ததில் இரண்டு வருடம் வயலூரையும் மேட்டுப்பட்டியையும் வேலுச்சாமியையும் மறந்தே விட்டேன்.

ஒரு நாள் ஆபீஸில் வழக்கமான அரசாங்கக் காக்கிக் கவர்களுக்கு நடுவே பெரியதாய் ஒரு வெள்ளைக் கவரும் இருந்தது. கவரின் மேல் வளைகாப்பு சீமந்தப் பத்திரிக்கை என பிரிண்ட். பத்திரிகையோடு ஒரு சின்னக் கடிதமும் எட்டிப் பார்த்தது.

"தம்பி வயசுல சின்னப் புள்ளையான நீங்க முப்பது வருடமாய் இருட்டுல இருந்த என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தீங்க. எங்க ஊர்க்காளி கொல்ல நினைக்கிறது என்னைப் போன்றவர்களோட தீய பழக்கங்களைத்தான்னு சொல்லாம சொன்னீங்க. முப்பது வருசமா விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கிற எனக்கே என் வயல்ல விளைஞ்சால்தான் எனக்குச் சொந்தங்கிற உண்மையைப் புரிய வச்சீங்க.

இப்போ என் வீட்டு வயல்லே விளைஞ்சிருக்குங்கிற சந்தோசத்திலே உங்களுக்கு பத்திரிகை அனுப்பி இருக்கிறேன். வளைகாப்புக்கு அவசியம் வரவேணும்" என்றது.

சிரித்துக் கொண்டேன்.

என்ன விசேசம் என்றான் பக்கத்து சீட் நண்பன்.

இதுவரைக்கும் நம்ப டிபார்ட்மெண்டிலே கல்லுக்கும் மண்ணுக்கும் தானே ட்ரீட்மென்ட் கொடுத்துக்கொண்டு இருந்தோம். இப்போ ஒரு மனித மனதுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தேன், அதுதான் இந்த பத்திரிக்கை. என்றேன்.

இவன் எப்பவும் இப்படித்தான்யா ஏதாவது நிலா சூரியன் மனிதன் மனசு ன்னு உளறிக் கொண்டிருப்பான் என்றார் எதிர் சீட்டு ஆபிசர்.

*************************